இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து (ITR) நீண்ட தூர தரை தாக்குதல் குரூஸ் ஏவுகணையின் (Long Range Land Attack Cruise Missile – LRLACM) முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்பட்ட இந்த குரூஸ் ஏவுகணை அனைத்து பணி இலக்குகளையும் எட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), ஹைதராபாத் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), பெங்களூரு ஆகியவற்றின் பங்களிப்புடன் பெங்களூரில் உள்ள DRDO வின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் (ADE) மூலம் உருவாக்கப்பட்டது, LRLACM இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணை வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாகும்.
தரையில் இருந்து மொபைல் லாஞ்சர்கள் மற்றும் கப்பலில் இருந்தும் ஏவக்கூடிய இந்த நீண்ட தூர குரூஸ் ஏவுகணை சோதனையை மூத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகள், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை சென்று தாக்கும் வகையில் நடைபெற்ற இந்த சோதனையை ரேடார், எலக்ட்ரோ-ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்ஸ் (EOTS) மற்றும் டெலிமெட்ரி கருவிகளைப் பயன்படுத்தி ஏவுகணையின் துல்லியம் மற்றும் செயல்திறனைக் கண்காணிக்கப்பட்டது.
நீண்ட தூரத்தில் எதிரி நிலைகளை குறிவைக்கும் திறன் கொண்ட, மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் அதிநவீன மென்பொருளுடன் பொருத்தப்பட்ட இந்த LRLACM ஆனது மேம்பட்ட நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வெற்றிபெற்றதை அடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ, ஆயுதப் படைகள் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.