டெல்லி: புல்டோசர் நடவடிக்கை  சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது’  என்றும்,  கிரிமினல் குற்றச்சாட்டுகள்/தண்டனைகள் காரணமாக மட்டுமே சொத்துக்களை இடிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது என்று உத்தரவிட்டு உள்ளதுடன், அதே வேளைய்ல்  பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் இந்த உத்தரவு செல்லாது, கட்டிடங்களை இடித்துஅகற்றலாம் என்று கூறி உள்ளது. இதுதொடர்பான வழி காட்டுதல்களையும் வெளியிட்டு உள்ளது.

 பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.   இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இது தொடர்பான பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டவர்களின் கட்டிடங்கள் உள்பட எந்த கட்டிடத்தையும் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி இடிக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தது. இருந்த போதும், சில அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேவி பார்த்திவலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தற்போது சந்திரசூடு ஒய்வுபெற்றுள்ளதால், இநத்  வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘குற்றம்சாட்டப்பட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமான செயலாகும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அதிகாரிகளின் தன்னிச்சை நடவடிக்கைகளை, மன்னிக்க முடியாது.

“ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒருவரைப் பொறுத்தமட்டில், அத்தகைய செயலையும் செய்ய முடியாது. அத்தகைய நபரின் விஷயத்தில் கூட, சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் சொத்து / சொத்துக்களை இடிக்க முடியாது.

நிர்வாகத்தின் அத்தகைய நடவடிக்கை முற்றிலும் தன்னிச்சையானது மற்றும் சட்டத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும். அப்படிப்பட்ட வழக்கில் நிறைவேற்று அதிகாரி சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, சட்டத்தின் ஆட்சிக் கோட்பாட்டிற்குப் புறக்கணித்த குற்றமாகும்.”

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு, மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியமானதாகும். வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு ஆகும். அத்தகையை கனவு கலைந்து போய்விடக் கூடாது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் இருக்கும் சட்டத்தைக் கொண்டு மக்களை காக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் என்பதற்காக மட்டுமே மக்களின் வீடுகள் இடிக்கப்படுமானால் அது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

நீதித்துறையின் பணிகளை அதிகாரிகள் கைகளில் எடுப்பதை ஏற்க இயலாது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தாலும் கூட வீடுகளை இடிக்கக் கூடாது.

குற்றம் சாட்டினாலே வீடுகளை எப்படி இடிக்கலாம்? குற்றம் சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே ஒருவரின் வீட்டை இடிப்பது சட்டவிரோதம். வீடுகளை இடிப்பது, ஒரே இரவில் தெருவில் பெண்கள், குழந்தைகளை பார்ப்பது மகிழ்ச்சியான காட்சியாக இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு சில உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தின் வெளிச்சத்தில் பாதுகாப்புகள் உள்ளன.

பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டாலோ அல்லது கோர்ட்டால் இடிப்பு உத்ரதரவு பிறப்பிக்கப்பட்டாலோ அதன் உத்தரவுகள் இதற்கு பொருந்தாது.

முன் அறிவிப்பு இல்லாமல் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது.

இடிப்பு நடவடிக்கைகளை வீடியோவாக எடுக்க வேண்டும். சொத்துக்களை இடிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்தியா முழுவதற்கும் வகுத்துள்ளோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி, சி.யு.சிங், எம்.ஆர்.ஷம்ஷாத், சஞ்சய் ஹெக்டே, நித்யா ராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், முகமது நிஜாம் பாஷா, ஃபவுசியா ஷேக், ரஷ்மி சிங் உள்ளிட்டோர் அளித்த பரிந்துரைகளுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

மூத்த வழக்கறிஞர் நச்சிகேதா ஜோஷி பரிந்துரைகளை தொகுத்ததற்காக மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வழக்கை ஒரு புறநிலை மற்றும் உணர்ச்சியற்ற முறையில் முன்வைத்ததற்காக அதிருப்தியும் தெரிவித்தது.

வீடு, கட்டிடங்கள் இடிப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள்

அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தின் ஒரு பகுதியை மட்டுமே இடிக்க முடியும்.

இடிக்கப்படுவதற்கு முன், விரிவான ஆய்வு அறிக்கையை ஆணையம் தயாரிக்க வேண்டும்.

இடிப்பு நடவடிக்கைகள் வீடியோ எடுத்து பாதுகாக்கப்படும். இடிப்பு அறிக்கை, செயல்பாட்டில் கலந்து கொண்ட காவல்துறை மற்றும் சிவில் பணியாளர்களின் பட்டியலுடன், நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும், மேலும் டிஜிட்டல் போர்ட்டலிலும் காட்டப்படும்.

வழிகாட்டுதல்களை மீறினால், அவமதிப்பு வழக்குகள் தொடரும்.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இடிப்பது கண்டறியப்பட்டால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள், இடிக்கப்பட்ட சொத்தை தங்கள் தனிப்பட்ட செலவில் இழப்பீடு செலுத்துவதோடு, மீட்டெடுக்கவும் பொறுப்பாவார்கள்.

தீர்ப்பின் நகல் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளும் இந்த தீர்ப்பு குறித்து அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.