டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில் அளவுக்கு ஏற்ப 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கூடுதல் விலை வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

இதனைத் தடுக்கவும் தொழில்நுட்ப தீர்வு காணவும் பொதுத்துறை நிறுவனமான ரயில் டெல்லுக்கு 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கி உள்ளது.

இதன்படி மதுபான உற்பத்தி முதல் விற்பனை செய்வது வரை கண்காணிக்கும் வகையில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு மது விற்பனை செய்யப்படும் போது ‌அந்த விற்பனைக்கு கண்டிப்பாக பில் வழங்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக்குகள் மூலம் நாள் ஒன்றுக்கு 120 கோடி ரூபாய்க்கும் வருடத்திற்கு சுமார் 45 ஆயிரம் கோடி அளவிற்கும் மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் பாட்டில் மீது அதிக விலை வைத்து விற்கப்படுவதை தவிர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாட்டில்களை ஸ்கேன் செய்து பில்லிங் மெஷின் மூலம் விற்பனை செய்யும் இந்த புதிய முறையானது ஏற்கனவே ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும்ள் வெளியிடப்பட்டுள்ளது.