சென்னை:  சென்னை திருவிக நகர் மண்டலத்தில், பெரம்பூர் அருகே மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கம் மற்றும், பல்நோக்கு மைய கட்டிடங்களை   திறந்து வைத்த மேயர் பிரியா,  சென்னை யில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மேயர் பிரியா கூறினார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். மேலும், கடந்த மழையின்போது, 24 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் தேங்கி நின்ற இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கிவிட்டதாகவும்  தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (நவ.9) மேயர் மேம்பாட்டு நிதியின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட புதிய வாழைமா நகர், 5வது தெருவில் ரூ.93.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தினையும், மற்றும்வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஏகாங்கிபுரத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தினையும் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்,  மேயர்  ஆர். பிரியா,  ரேதடசசடதிரு. வி. க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர்   கே. ஜெ. பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர்  சரிதா மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு  பதில் கூறினார்.

“சென்னையில் வரும் 14, 15ம் தேதிகளுக்குப் பிறகு கனமழை இருக்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது என்றவர்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். துணை முதல்வரும், ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்களும், எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ, அந்தப்பகுதிகளில் எல்லாம் அவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் பெய்த மழையின்போது, சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்கும் மேலாக எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வரக்கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார் தேவையான பகுதிகள், தேங்கி நிற்கும் தண்ணீரை குழாய்கள் மூலம் மழைநீர் வடிகாலுக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டஅறிவிப்பில்,   தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 9) தென்மேற்குவங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதேபோல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 11-ம் தேதி கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 12-ம் தேதி சில இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில்பெரும்பாலான இடங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.