சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ₹10,000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் மீதான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வார்டு 182-க்கு உட்பட்ட திருவான்மியூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வழங்கிய இடத்தில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய விஸ்வநாதன் கையும் களவுமாக பிடிபட்டார்.
2012ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில், தனது மனைவி பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மூர்த்தி என்பவர் 1988ம் ஆண்டு தரை மற்றும் முதல் தளம் கட்டினார்.
பின்னர் 2வது தளத்தை கட்டிய அவர் திருத்தப்பட்ட வரியை செலுத்தி 2011ம் ஆண்டு மேலும் இரண்டு தளங்களை கட்டி முடித்தார்.
இந்த நிலையில் மூர்த்தியை தனது அலுவலகத்திற்கு அழைத்த இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் ஒன்று முதல் நான்கு வரை உள்ள தளங்கள் உரிய அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சியின் நடவடிக்கையைத் தவிர்க்க தளத்திற்கு ₹5,000 வீதம் நான்கு தளத்திற்கு மொத்தம் ₹20,000 லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் மூர்த்தி லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்த நிலையில் விஸ்வநாதனை சந்தித்து முதற்கட்டமாக ₹10,000 தர சம்மதித்தார்.
இதனைத் தொடர்ந்து 2012 ஜனவரி 10ம் தேதி ₹10,000த்தை விஸ்வநாதனிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் விஸ்வநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், ₹10,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சென்னை மாநகராட்சி அதிகாரி விஸ்வநாதனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி லஞ்ச ஒழிப்பு இயக்குநரக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.