சென்னை
நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம். இந்த முறை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்ததுதைஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை என்னும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்த ஆண்டு தீபாவளியை அக்டோபர் 31 ஆம் தேதியன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1 ஆம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி அனைத்து, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் நாளை (9ம் தேதி) முழு நேரம் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் நாளை (9- ம்தேதி) பள்ளிகள் முழுநேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.