திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தேர், ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேர் இன்று மாட வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த வெள்ளோட்டத்தில் தேரின் முன்பு சிறுமிகள் ஆடிப்பாடி சென்றதுடன், பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகர தீபமும் ஏற்றப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் உலா நடைபெற உள்ளது. இந்த தேரில் பல்வேறு பாதிப்புகள் இருந்ததால், அதை உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், மகாரதமான இந்த தேரை புணரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ரூ.70 ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடர்ந்து, 59 அடி உயரமும் 200டன் எடையும் கொண்ட இந்த பிரமாண்ட பெரிய தேர் புணரமைக்கப்பட்டு உள்ளது.
புனரமைப்பு பணி நிறைவுற்றதை அடுத்து, அந்த தேரின் வெள்ளோட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. முன்னதாக, பெரிய தேர் எனப்படும் மகாரதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் வடம் பிடிக வீதி உலா வெள்ளோட்டமாக கோலாகலமாக நடைபெற்றது.
தேருக்கு முன்பாக மாணவிகள் பரதநாட்டியம் ஆடியவாறு வளம் வந்தனர். மகாரதத்தில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் மற்றும் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்த பகுதிகள் மாற்றப்பட்டு பிரம்மா மற்றும் வாரபாலகர் சிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பெரிய தேரில் 470 சிலைகள் இருந்த நிலையில் தற்போது புதிதாக 203 சிலைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மகா ரதவெள்ளோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.