சென்னை :  போதையில்லா தமிழ்நாடு என்ற பெயரில் ரீல்ஸ், மீம்ஸ் உள்ளிட்ட விழிப்புணர்வு பதிவுகளை சிறப்பாக தயாரித்து வெளியிடுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். ஏற்கனவே டாஸ்மாக்கால் ஒரு தலைமுறையே சீரழிந்து கிடக்கும் நிலையில், தற்போது போதை பொருள் நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும்,  போதை பொருள் விற்பனை குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  கடந்த மாதம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டார். இதைத்தொடர்ந்து,  தற்போது, போதையில்லா தமிழ்நாடு என்ற தமிழக அரசின் நோக்கத்தை செல்போன் வாயிலாக பலருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, “போதையில்லா தமிழ்நாடு” எனும் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ், போஸ்டர்ஸ், ரீல்ஸ் ஆகியவற்றை தயார் செய்து அனுப்ப கோரியுள்ளது. இந்த விழிப்புணர்வு பதிவுகளை வரும் நவம்பர் 15ஆம் தேகிக்குள் tndiprmediahub@gmail.com என்ற தளத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெரும் நபர்களுக்கு தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.ப.சாமிநாதன் பாராட்டு சான்றிதழ் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.