சென்னை: சுகாதாரத்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனால் தமிழ்நாடெங்கும் காய்ச்சல் முகாம்கள், இரத்தப் பரிசோதனை, வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளனரா மற்றும் மழைநீர் பழைய டயர்கள், பாத்திரம் போன்றவற்றில் தேங்காமல் உள்ளதா என்பதை கண்காணிக்கவும், கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்துகளை இருப்பு வைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அரசு மருத்துவமனையில் பாம்பு கடி, நாய்கடி போன்றவற்றுக்கு போதுமான மருந்துகள் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா..? என கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடிக்கு சுகாதாரத்துறை மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவர்கள் போதிய அளவில் உள்ளனர். 3 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 18,460 நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 36 மருத்துவக் கல்லூரிகளிலும் தகுதி பெற்ற நிரந்தமான மருத்துவ முதலவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாம்பு கடி, நாய் கடிக்கு சுகாதாரத்துறை மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 8 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 2,553 மருத்துவப்பணியிடங்களுக்கு, 23,917 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2025 ஜனவரியில் நடைபெறும். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? .சுகாதாரத்துறை மீது களங்கம் ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். இபிஎஸ் மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத்தயார்,”எனத் தெரிவித்தார்.
இதனிடையே 13 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதிலில், “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிக்கிறது; அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், காலாவதி அரசியல்வாதியாக மாறி உள்ளனர்”
இவ்வாறு தெரிவித்தார்.