சென்னை: உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என பணி நீக்கம் செய்யப்பட்ட சாம்சங் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசின் உறுதிமொழியை ஏற்று சாம்சங் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் வாங்கிய ஊழியர்கள், 91பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் அமைச்சர்கள் கூறியிருந்தனர். ஆனால், அமைச்சர்களின் உத்தரவாததை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய 91 தொழிலாளர்களை சாம்சங் நிறுவனம் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது மற்ற தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசும், பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்களும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்
தொழிலாளர்கள் விஷயத்தில் திமுக அரசு, ஆலை அதிபர்களுடன் கைகோர்த்து தொழிலாளர்களை பழிவாங்கி உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்ற னர். இதனால், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், சாம்சங் நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து போராட்டம் நடத்த முயற்சித்து வருகின்றனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி முழுவதும் எந்தவெரு அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.
இதன் காரணமாக, போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழிலாளர்கள் தரப்பில், தாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்கவும் உத்தரவிடக்கோரி சிஐடியூ தரப்பில் உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்று கூறியதுடன், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதையடுத்து தொழிலாளர்கள் முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் வாதம் செய்த நிலையில், இந்த மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!