அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது உலகம் அறிந்தது.

வெற்றியைத் தொடர்ந்து டிரம்ப் நிகழ்த்திய உரையின் போது, ​​அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஜே.டி.வான்ஸ் மற்றும் உஷா சிலுக்குரி ஆகியோரும் மேடையில் இருந்தனர்.

டிரம்ப்பின் இந்த உரையை அடுத்து உஷா சிலுக்குரி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக உள்ள இந்த உஷா சிலுக்குரி இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உஷா சிலுக்குரி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் உய்யூறு மண்டலம் சாய்புரம் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஐஐடி-யில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவரான இவரது தந்தை ராதாகிருஷ்ணன் மற்றும் மாலிகுலர் பயாலஜிஸ்டான இவரது தாயார் லட்சுமி இருவரும் 1980ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததுடன் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருவரும் பணிபுரிந்து வந்தனர்.

1986ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் பிறந்த உஷா சிலுக்குரி அங்குள்ள யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பின்னர் வழக்கறிஞர் பட்டமும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற நிலையில் அடுத்ததாக துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி-யும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்ற தகவல் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.