டெல்லி: அதிமுக முன்னாள் எம்.பி.  ஜெயவர்தன் தொடர்ந  தமிழ்நாடு புதிய தலைமைச் செயலகம் தொடர்பான  வழக்கை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது,  கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. மேலும் புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியும் உத்தரவிட்டார்.

அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட உத்தரவு மற்றும் ஆணையத்தை  எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்தும் , முகாந்திரம் இருந்தால் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி,  அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன்,  நிலுவையில் உள்ள வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைக்கக் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில்,  திமுக  அரசு முந்தைய திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதில் முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது.  இதை அதிமுக கடுமையாக சாடியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தப்படும் என  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெ.ஜெயவர்தன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.