கோவை: இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்றும், கோவையில் தங்க நகை உற்பத்திக்கு ரூ.124 கோடியில் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்றும் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக கோவையில் கலைஞர் நூற்றாண்டு நுலகத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் புகழ்ந்து பேசினார்.
இரண்டுநாள் பயணமாக கோவை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக, கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கோவைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது திமுக அரசு என்று கூறியவர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக அரசு என்றும், கோவை கிரிக்கெட் மைதானம் அமைக்க விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.
கோவையில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் நூலகம் அமைய உள்ளது என்றவர், இந்த கோவை நூலகம் கம்பீரமாக மிகச்சிறப்பாக அமையும். ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு மதுரை நூலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர் அதுபோல கோவை நூலகம் கட்டப்பட்டு வரும் 2026ம் ஆண்டு திறக்கப்படும் என்றார்.
கோவையில் பெரியார் பெயரில் நூலகம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும் என்றவர், மாணவர் சமுதாயத்தை பார்க்கும்போது ஆற்றல் ஏற்படுகிறது. கோவை மாவட்டத்தில் 3 முறை நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன் என்றவர் கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவைக்கு சிறப்பான திட்டங்களை செய்ய உள்ளார் தடைகளை உடைத்து மீண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி என்று கூறினார்.
மேலும், கோவையில் புதிய தகவல் தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும் என்றவர், இது கோவை வளர்ச்சியில் புதிய மைல் கல்லாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், பொதுமக்களின் வசதிக்காக, சின்னியம்பாளையம் – நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும் என்றும், மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், ரூ.26 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும் என்றார்.
ரூ.200 கோடி செலவில் மண் சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும் என்றவர், மனித – விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும் என்று தெரிவித்தவர், நேற்று வணிகர்களுன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, தங்க நகை வியாபாரிகள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். அது நிறைவேற்றப்படும் என்றவர் கோவையில், ரூ.124 கோடி செலவில் தங்க நகை உற்பத்திக்கு தொழில் வளாகம் அமைக்கப்படும். ஏராளமானோர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார்.
தற்போது, நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும்.
இவ்வாறு பேசினார்.