டெல்லி: அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது என உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதி உள்பட 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஏற்கனவே கடந்த 1978ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை 9நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் உறுதி செய்துள்ளது.
1986ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான வழக்கில், சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு, உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு தனது கருத்தை பிரபலித்தபோது, பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று கூறியிருந்த நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பின்போது, அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த பரபரப்பை தீர்ப்பை வழங்கி உள்ளது.
அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் அனைத்து தனியார் சொத்துக்களும் ‘சமூகத்தின் பொருள் வளங்களில்’ ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றும், “பொது நன்மை”க்காக மாநில அதிகாரிகளால் கையகப்படுத்த முடியாது என்றும் பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, மகாராஷ்டிரா வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை சீரமைப்புக்காக அரசு கையப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு சொத்து உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
1991-ல் அந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனுடன் மேலும், பல்வேறு தரப்பினரும் மகாராஷ்டிரா அரசின் சொத்து கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையினபோது வழக்கை விசாரித்த விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “முதலாளித்துவமும், சோசியலிசமும் சொத்து குறித்து வெவ்வேறு பார்வையைக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவம், அனைத்து சொத்துகளையும் தனி மனிதர்களுக்கு உரியதாகப் பார்க்கிறது. அதுவே, சோசியலிசம், அனைத்தையும் பொதுமக்களுக்கானதாகப் பார்க்கிறது. இந்தியாவில் நாம் சொத்துகளை, முழுவதும் தனிநபருக்கு உரியதாகவும் அல்லது முழுவதும் பொதுமக்களுக்கு உரியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஒன்றாக அணுகுகிறோம்.
நம்முடைய அரசமைப்புச் சட்டம் சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்டது. எனவே, பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு. சொத்து மறுபகிர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “காங்கிரஸ் அதன் சொத்து மறுபகிர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகள், தங்கம், வாகனங்கள் உள்ளிட்ட தனியார் சொத்துகளை அபகரிக்கப் போகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்தை பறித்து அவற்றை அதிக குழந்தைகளைப் பெற்ற ஊடுருவல்காரர்களுக்கு வழங்கிவிடும். இந்துப் பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் விட்டு வைக்காது” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது பெரும் விவாதப்பொருளாக மாறியது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்ததுடன், தாங்கள் இது போன்ற எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது.
இதைத்தொடர்ந்து, தனியார் சொத்து கையப்படுத்துதல் மற்றும் சொத்து மறுபகிர்வு தொடர்பான வழக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
தீர்ப்பில், பொது நலனுக்காகவே இருந்தாலும் எல்லா தனியார் சொத்துக்களையும் அந்த சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்கள் கைப்பற்ற முடியாது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
சந்திரசூட் உள்ளிட்ட 7 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஆதரித்த நிலையில் அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சுதான்சு துளியா இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்டார்.
தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்தி பொது நலனுக்காக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்த மாநில அரசுகளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(b) (c) அதிகாரமளிக்கிறது. இந்த உரிமையை சட்டப்பிரிவு 31C பாதுகாக்கிறது. தனியார் சொத்துக்களும் இதில் சட்டப்பிரிவில் அடங்கும் என்பதை 1978 இல் வழங்கப்பட உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது.‘