சென்னை: ஒரே நேரத்தில் 120 பேருந்துகள் நிற்கும் வகையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டு வரும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த முடிச்சூரில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 42.70 கோடி மதிப்பில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் 117 பேருந்து களை நிறுத்தும் வகையிலும், ஓட்டுநா் – நடத்துநா்கள் 100 போ் தங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நெரிசல், வாகன நெரிசல் காரணமாக, சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டு, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இருந்தாலும் சென்னை உள்பட புறநகர் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் கிளாம்பாக்கத்திற்குள் வந்துதான் ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. ஆனால் அதற்கு பொதுமக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை. மேலும், கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்து பயணிகள் மற்றும் ஆம்னி பேருந்து பயணிகள் குவிந்ததால் பேருந்து நிலையம் ஸ்தம்பித்தது. கடும் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளின் வசதிக்காக, தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் ரூ.42 கோடி செலவில்கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தை இன்று அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டது. இம்மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றவர் முதலமைச்சர் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்றார். மேலும், ஒரே நேரத்தில் இங்கு 120 பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்குவதற்காக 2 Dormitory-கள், உணவகங்கள் என அனைத்து நவீன வசதிகளும் இந்த பேருந்து நிலையத்தில் இடம் பெற்றுள்ளன என்றவர், இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.