சென்னை: திருவொற்றியூர் விக்டரி பள்ளி வாயு கசிவு விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி உள்ள நிலையில்,  மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று மீண்டும் அங்கு நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார்  பள்ளி வாயு கசிவு விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மவுனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. சாதாரண மோட்டிவேஷனல்  பேச்சுக்கே துள்ளிக்குதித்து எழுந்து வந்து ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி ஆசிரியர்மீது ஒழுங்கு நடவடிக்கையும், , சம்பந்த நபரை காவல்துறை கொண்டு கைது செய்தும் நடவடிக்கை எடுத்த நிலையில், சுமார் 40 மாணவிகள் திடீர் மயக்கமடைய செய்த விஷவாயு எங்கிருந்து வந்தது, என்பதற்கான  காரணத்தை ஆய்வு செய்வதில் மெத்தனம் காட்டுவது ஏனோ என சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் கிராமத் தெருவில் இயங்கி வருகிறது விக்டரி என்ற பெயரிலான மேல்நிலைப் பள்ளி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென  பரவிய விஷவாயு காரணமாக,  வகுப்பறையில் இருந்த 35 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இது பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். ஆனால், ஆய்வு முடிவுகளை இதுவரை வெளியிடவில்லை.  இதனால், வாயு கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதைதொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு. கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரசாயண ஆலைகளிலும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால்,  திடீரென எப்படி வாயு கசிவு ஏற்படுகிறது என்பதை  கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  சுமார்  10 நாட்களுக்கு பிறகு நேற்று (நவம்பர் 4ந்தேதி பள்ளி திறக்கப்பட்ட நிலையில்,   மீண்டும் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து அலடிஅடித்து ஓடிவந்த பெற்றோர்கள் ஒரு சிலரும் மயக்க மடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பெற்றோர்கள் பள்ளியை சூழந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்குவந்த காவல்துறையினர்  பள்ளிக்கு விடுமுறை விட அறிவுறுத்தி பெற்றோர்களை கலைந்துபோகச் செய்தனர். காவல்தறை அதிகாரிகளிடம் பெற்றோர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். பள்ளியில் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிக்கின்றனர், கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கின்றனர். பள்ளி வகுப்பறையில் காற்று வசதி இல்லை. போதிய கட்டமைப்பு இல்லை. விளையாட்டு மைதானம் கிடையாது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் அடிக்கின்றனர். பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதில் கூறுவதில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர்.

இதைத்தொடர்ந்து,  பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் அனைத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து மறு அறிவிப்பு வெளியாகும் வரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம் இன்று ஆய்வு நடத்துகிறது. நவீன சாதனங்களைக் கொண்டு காற்றில் இருக்கக்கூடிய நச்சுதன்மை,‘ வாயுக்களின் தரம் குறித்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்கின்றனர்.

இந்த முறையாவது வாயு கசிவு எப்படி ஏற்படுகிறது, எங்கிருந்து வருகிறது என்பது குறித்த உண்மையை தகவலைகளை வெளியிடுவார்களா என பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தனியார்  கிறிஸ்தவ பள்ளி வாயு கசிவு விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மவுனமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவவதாக சமூக வலைதளக்ளில் விமர்சிக்கப்படுகிறது.