சென்னை: திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வரும் விக்டரி என்ற பெயரிலான தனியார் பள்ளியில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை பள்ளி வந்த மாணவர்களில் 2 பேர் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டள்ளது.
திருவொற்றியூர் கிராம தெருவில் இயங்கி வருகிறது விக்டரி மெட்ரிகுலேசன் ஹையர் செகன்டரி ஸ்கூல் என்ற தனியார் கிறிஸ்தவ பள்ளி. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மூன்று அடுக்கு மாடி கொண்ட கட்டடத்தில் கடந்த அக்டோபர் 25ந்தேதி மதிய வேளையில் மூன்றாவது தளத்தில் இருந்த மாணவ மாணவிகள் சுமார் 35 பேர் மூச்சுத் திணறி திடீரென மயங்கி விழுந்தனர்.
அந்த பள்ளியில் விஷவாயு கசிந்ததால்,. அதை சுவாசித்தால் அவர்கள் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகே உள்ள அரசுமற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் என பலரும் விரைந்து வந்து, ஆய்வு செய்தனர். அப்போது பள்ளியில் எப்படி விஷவாயு கசிந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதுடன், அருகே உள்ள ரசாயண ஆலைகளில் இருந்து வெளியேறிய புகை மற்றும் வாயுவால் மாணவர்கள் மயக்கம் அடைந்தனரா என விசாரித்து வந்தனர். ஆனால் விஷவாயு கசிந்தது எப்படி, எங்கிருந்து விஷவாயு பரவியது என்பது குறித்த எந்தவொரு விளக்கம் வெளியிடப்படவில்லை. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விக்டரி பள்ளி இன்று காலை வழக்கம்போல மீணடும் இயங்கியது. இந்த நிலையில் முற்பகல் 11மணி அளவில் இரண்டு பேர் சுவாசிக்க முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களைபள்ளி நிர்வாகம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 2 மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் பள்ளியில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினரும் பள்ளிக்கு வந்துள்ளனர்.