மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையில் இருந்த ரத்தக் கரையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் கடசராய் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கடசராய் பகுதியை அடுத்த லால்பூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலத் தகராறில் தந்தை மற்றும் மூன்று மகன்கள் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டனர்.

இதில் தந்தை மற்றும் ஒரு மகன் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் இறந்ததை அடுத்து அவரது படுக்கையில் இருந்த ரத்தக் கரையை துடைத்து சுத்தம் செய்யும் படி அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி ரோஷினி பாய் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த படுக்கையை அவர் சுத்தம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை மருத்துவரை இடமாற்றம் செய்த மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த செவிலியர் உள்ளிட்ட இரண்டு சுகாதாரப் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் மீதான இறுதி நடவடிக்கை உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.