சென்னை; தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் வெளியிட்டார். மேலும் பாஜக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு என அறிவித்து இருந்தார்
இதைத்தொடர்ந்து அவரது கட்சியின் கொள்கை, கோட்பாட்டிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். அவரது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திமுக கூட்டணி கட்சியினரிடேயும் சலசலப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை அக்கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் கொள்கைகள் குறித்து மற்ற கட்சிகள் கூறிய விமர்சனங்கள் மற்றும், கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.