டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பொதுமக்கள் வெடி வெடித்து கோலாகலமாக பண்டிகையை கொண்டாடியதால், சென்னை உள்பட நாடு முழுவதும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.
அதன்படி, தீபாவளி நாளில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகரித்த காற்று மாசு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக, 3 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது.
தீபாவளியையொட்டி, பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், பலர் விதிகளை மீறி பட்டாசுகொளை கொளுத்தி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசு வெடிக்க தமிழ்நாட்டில் காலை 2மணி நேரமும், மாலை 2மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதை மீறி பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை மீறியும் மக்கள் பட்டாசு வெடித்ததால், வெள்ளிக்கிழமை காலை தலைநகரில் காற்று மாசு அதிகரித்தது, நகரம் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 350 ஆக இருந்தது. பெரும்பாலான இடங்களி காற்றின் தரம் மிகவும் மோசம் என்றநிலையில் இருந்தது.
ஹைதராபாத்திலும் தீபாவளி நாள் இரவில் நகரவாசிகள் பட்டாசு வெடித்து தீபாளியைக் கொண்டாடியதால் நகரின் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்திருந்தது.
ஹைதராபாத் போலீஸார் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடைவிதித்திருந்த நிலையில் அதைத் தாண்டியும் மக்கள் பட்டாசு வெடித்தனர்.
மும்பை, சென்னையிலும் தீவிரமடைந்த காற்று மாசு: தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தது. பல்வேறு இடங்களில் புகைமூட்டங்கள் காணப்பட்டன.
சென்னையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக, 3 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. நேற்று 4 இடங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியிருந்த நிலையில் இன்று மாசு சற்று குறைந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று மதியம் நிலவரப்படி 4 இடங்களில் காற்று மாசு 200ஐ கடந்திருக்கிறது. குறிப்பாக ஆலந்தூரில் 257ஆக காற்று மாசு பதிவாகியிருந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 3 இடங்களில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி இருக்கிறது.
அதாவது, சென்னை பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 237 ஆகவும், வேளச்சேரி – 219, ஆலந்தூர் – 211 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.