சென்னை: சென்னையில் இன்று முற்பகல் 11 மணி முதல் பல இடங்களில் இடிமின்னலுடன் கனமழை வெபய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று தீபாவளி பர்சேஸ் சென்றவர்கள், வியாபாரிகள், சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் என பல தரப்பினரும் திடீர் மழை காரணமாக கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தகவலின்படி, இன்று சில மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறியிருந்தது. அதாவது, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு மாறாக, சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 11மணி முதல் இடி மின்னலுடன் கடும் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில், ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தாலும் சென்னை உள்பட சில இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் சாமானிய மக்கள் இரவில் தூக்க கடும் அவதிப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை 11 மணி முதல் தற்போது வரை சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தீபாவளி பர்சேஸ்சுக்காக திநகர், அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் என வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளுக்கு சென்றவர்கள், தீபாவளி விற்பனையை எதிர்நோக்கி காத்திருக்கும் வணிக நிறுவனங்களும், பட்டாசு கடைக்காரர்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நவம்பர் 1,2ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 31.10.2024 (தீபாவளி தினம்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதுபோல, நவம்பர் 2ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கான மழைப்பொழிவு நிறைவடையும் நிலையில் உள்ளது. தீபாவளி நாளிலிருந்து குறிப்பாக காற்று வீசும் திசை கிழக்கு நோக்கி மாறுகிறது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தெற்கு மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் தீபாவளி நாளில் மழை பெய்யலாம்.
நம்ம சென்னையில் மழை பெய்யுமா என்றால், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியன்று, ஒரு சில இடங்களில் (இங்கொன்றும் அங்கொன்றுமாக) அதிகாலையில் மழை பெய்யலாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல தீபாவளி நாள்தான். ஆனால் அதே வேளையில் டெல்டா மாவட்டங்கள், உள் மற்றும் தென் தமிழகத்திற்கு மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.