இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர்.

லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் சூரத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளிக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

சூரத்தின் புறநகரில் உள்ள உதானா ரயில் நிலையத்தில் இருந்து பீகார், சத்தீஸ்கர் மற்றும் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்ல கடந்த இரண்டு நாட்களாக மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம் குடும்பமாக ரயிலைப் பிடிக்க மக்கள் முன்டியடித்து வருகின்றனர்.

சூரத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 22 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் இரண்டு நாட்களுக்க முன்பே பயணத்தை துவங்கி விட்டனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏற மக்கள் கூட்டம் குவிந்ததை அடுத்து கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

சிறப்பு ரயிலுடன் சேர்த்து நேற்று சுமார் 6 ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் அதில் மொத்தம் சுமார் 25000க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் பெற்று பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

ரயில்களில் டிக்கெட் எடுக்க 2 கிலோ மீட்டர் நீள க்யூவில் நின்ற பொதுமக்கள் 12 மணி நேரம் வரை காத்திருந்து டிக்கெட் பெற்று ரயில் ஏறிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்துடன் வந்தவர்கள் பலர் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களை காணாமல் தேடி அலைந்தனர்.

இன்றும் கூடுதல் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தீபாவளி முதல் சத் பூஜை எனும் வட இந்திய பண்டிகை வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 10 வரை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ரயில் தவிர வேறு மார்க்கமாகவும் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தீபாவளி பண்டிகைக்குள் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் சூரத் நகரம் மொத்தமாக காலியாகிவிடும் என்று கூறப்படுகிறது.