சென்னை: பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கும் வகையில் தீயணைப்புபடை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புத்தாடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், திருவான்மியூர், பாரிமுனை உள்ளிட்ட வணிக வீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தி.நகர், வண்ணாரப் பேட்டை, புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.

இதற்கிடையில், பட்டாசு வெடிக்கவும் தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,  காலை 6 முதல் 7 மணிவரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கி உள்ளார்.

இதுஒருபுறம் இருக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினர் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகள், குடிசை பகுதிகள் உள்ள பகுதிகளில் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், உயிர் சேதம் இன்றி உடனடியாக தீயை அணைக்கும் பொருட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர உதவி எண்கள் மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண் 101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108, தேசிய உதவி எண் 112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,   தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என மொத்தம் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சிகிச்சை வார்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் சார்பில் மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதுபோல, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பான மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோருது,   இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் சூடு தீக்காயங்கள், மின் தீக்காயங்கள், ஆசிட் காயங்கள், பட்டாசுகளினால் ஏற்படும் தீக்காயங்கள், ரசாயன தீக்காயங்கள் என்று பல்வேறு காரணங்களால் 2,000 பேர் வரை பயன்பெற்று சென்று கொண்டிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்திருக்கிறது.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை 100 ஆண்டுக்கால பெருமைக்குரிய ஒரு மருத்துவமனை ஆகும். அனைத்து மருத்துவமனைகளும் சிஎஸ்ஆர் நிதியுதவி பெற்று மேம்படுத்தப்பட்டு வருகின்றன, அந்த வகையில் இந்த மருத்துவமனைக்கும் சிஎஸ்ஆர் நிதியுதவி பெற்று மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மருத்துவமனை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது. தன்னார்வலர்களுக்கு தத்துக்கொடுக்கவும் படமாட்டாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.