சென்னையின் முக்கிய கடை வீதிகளான தி.நகர், புரைசைவாக்கம், சௌகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபாவளிக்குத் தேவையான துணி, ஆபரணங்கள், பட்டாசுகள் ஆகியவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

ரயில்கள் இல்லாததால் நேற்று காலை காற்றுவாங்கிய தி.நகர் ரங்கநாதன் தெரு கடைத்தெருக்கள் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து திக்குமுக்காடியது.

அதேவேளையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு மற்றும் துணிகளின் விலை அதிகரித்து இருந்ததால் மக்கள் அதிக அளவு பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் விலையேற்றம் இருக்கும் என்றபோதும் இந்த ஆண்டு 25 முதல் 30 சதம் விலை உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக இனிப்பு மற்றும் பட்டாசுகளின் விலை அதிகரித்ததை அடுத்து அதன் விற்பனை சரிந்ததாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு இதே வேளையில் நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 லட்ச ரூபாய்க்கு விற்பனையான பட்டாசுகள் இந்த ஆண்டு 3 முதல் 4 லட்ச ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதாக சில வியாபாரிகள் கூறியுள்ளனர்.

உற்பத்தி விலை அதிகரித்ததைத் தொடர்ந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து கடந்த ஆண்டை விட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாததாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், ஆன்லைன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.