சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கானோர் ஓய்வூதிய பலன் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும், 2015-ம் நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி, ஏராளமான சிறப்பு பேருந்தகளும் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொரிலாளர்களின் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தொரிலாளர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கொஞ்சம் பேருக்கு ஓய்வூதிய பலன் வழங்க அரசு முன்வந்துள்ளது. அதன்படி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டியுள்ளது.
இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.50.23 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.23.55 கோடி, விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.47.14 கோடி, சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.29.30 கோடி, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.54.82 கோடி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.73.53 கோடி, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.53.91 கோடி, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.39.54 கோடி என மொத்தம் ரூ.372.06 கோடி தேவைப்படுகிறது.
இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறைத் தலைவர் கோரிக்கை வைத்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த அரசு ரூ.372 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்தை பங்கு மூலதன உதவியாக ஒதுக்கி ஆணையிட்டுள்ளது ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.