இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகம் பங்காற்ற முடியும் என்று உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போரை எதிர்ப்பதாகக் கூறுவதுடன் நின்றுவிடாமல் அதற்கு அப்பாலும் இந்தியா செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும், “உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் மோடி தமது செல்வாக்கைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வது அவருக்கும் இந்தியாவுக்கும் பெருமதிப்பைத் தேடித் தரும்,” என்றும் அவர் கூறினார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மோடி பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸெலென்ஸ்கி இவ்வாறு கூறினார்.

“போர் எங்கள் மண்ணில் நடப்பதால் எங்களது விருப்பத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடப்பதே சிறப்பாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டோன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதால் உக்ரைனிய வீரர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

அதேவேளையில் அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது கேள்விக்குறியாகும் என்பதால் உக்ரைனின் நிலை நிச்சயமற்றதாக உள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி அளித்து வருகிறது. அந்த உதவி நின்றுவிட்டால் உக்ரைனுக்கு அது பெரும் பின்னடைவாக அமையும்.

இந்த நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சு குறித்தும் இந்தியாவின் மத்தியஸ்தம் குறித்தும் கடந்த சில மாதங்களாக பேசப்படும் நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக உக்ரைன் அதிபரின் இந்த பேட்டி அமைந்துள்ளது.