2024 ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் மட்டும் இந்தியர்கள் ரூ.120 கோடி இழந்துள்ளனர்

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியர்கள் ரூ.120.30 கோடியை “டிஜிட்டல் கைது” மோசடிகளில் இழந்துள்ளதாக மத்திய அரசின் சைபர் கிரைம் தரவு கூறுகிறது.

இந்திய அளவில் சைபர் குற்றங்களை கண்காணிக்கும் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய (I4C)அறிக்கைப்படி, டிஜிட்டல் மோசடிகளின் புதிய அங்கமாக டிஜிட்டல் கைதுகள் உருவெடுத்துள்ளது.

இந்த மோசடிகளை மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய மூன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து செய்யப்படுத்துகின்றனர்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான தரவுகளை ஆய்வு செய்த இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) இந்த மூன்று நாடுகளில் இருந்து 46% இணைய மோசடிகள் இந்த காலகட்டத்தில் பதிவானதைக் கண்டறிந்துள்ளது – இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 1,776 கோடியை இழந்துள்ளனர்.

நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் (என்சிஆர்பி) தரவுகள் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை 7.4 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன, அதே சமயம் 2023ல் 15.56 லட்சம் புகார்கள் வந்துள்ளன. 2022ல் மொத்தம் 9.66 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன, அதற்கு முந்தைய ஆண்டு 4.52 லட்சமாக இருந்தது.

I4C படி, நான்கு வகையான மோசடிகள் உள்ளன – டிஜிட்டல் கைது, வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி (பணி அடிப்படையிலானது) மற்றும் காதல்/டேட்டிங் மோசடி. இதில் ஜனவரி – ஏப்ரல் காலகட்டத்தில் டிஜிட்டல் கைது மூலம் இந்தியர்கள் ரூ.120.30 கோடியும், வர்த்தக ஊழலில் ரூ.1,420.48 கோடியும், முதலீட்டு மோசடியில் ரூ.222.58 கோடியும், காதல்/டேட்டிங் ஊழலில் ரூ.13.23 கோடியும் இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான பொருட்கள், போதைப்பொருட்கள், போலி பாஸ்போர்ட்கள் அல்லது பிற கடத்தல் பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பியதாக மோசடி அழைப்பு மூலம் மிரட்டி டிஜிட்டல் பிடியில் கொண்டுவரும் அழைப்பாளர்கள்.

அப்படி தங்கள் பிடியில் சிக்கியவர்களை ஸ்கைப் அல்லது வேறு வீடியோ அழைப்பு தளம் மூலம் தொடர்பு கொண்டு சட்ட அமலாக்க அதிகாரிகளாக, சீருடை அணிந்து, காவல் நிலையங்கள் அல்லது அரசு அலுவலகங்களைப் போன்ற இடங்களிலிருந்து அழைப்பார்கள், மேலும் “சமரசம்” மற்றும் “வழக்கை மூடுவதற்கு” பணம் கோருவார்கள்.

சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் “டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டனர்”, அதாவது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அவர்களை மனரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

I4C அதன் NCRP, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் மற்றும் சில திறந்த மூல தகவல்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்த பிறகு மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இருந்து இந்த அழைப்புகள் வந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி போலி வேலை வாய்ப்புகள் மூலம் இந்தியர்களை இதுபோன்ற சைபர் கிரைம் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதும் தெரியவந்துள்ளது.