சென்னை:  மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமார் வீட்டுக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை தமிழ்நாடு அரசு திடீரென விலக்கி உள்ளது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது வீட்டுக்கு மீண்டும்  காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு  மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமார் இருந்து வருகிறார். இவர் சமீப காலமாக திமுக அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார். , சமீபத்தில், மாஞ்சோலை விவகாரத்தில் தலையிட்டு, மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக உத்தரவிட்ட நிலையில், சென்னை  மாநகர காவல் ஆணையராக அருண் பதவி ஏற்றதும், ரவுடிகளுக்கு புரியும் மொழில் பதில் சொல்வேன் என கூறிய நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. அதுபோல வடசென்னை துணைஆய்வாளர் ஒருவரையும் ஆணையத்துக்கு வரவழைத்து எச்சரித்ததுடன், டிஜிபி அருண் மன்னிப்பு கேட்க வைத்தது.

காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதான இருவர், சித்ரவதைக்கு ஆளானது குறித்தும், விசாரணை நடத்திய, மனித உரிமை ஆணைய போலீஸ் டி.எஸ்.பி., சுந்தரேசன், போலீஸ் துறையினருக்கு எதிராக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். இந்த பிரச்சினையில்,  அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் தயாரான நிலையில், அக்.10-ம் தேதி, திடீரென டி.எஸ்.பி., மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாநில மனித உரிமை ஆணைய போலீஸ் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.

இதை அறிந்த, மாநில மனித உரிமை ஆணையத் தலைவர், நீதிபதி மணிக்குமார், தம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, மனித உரிமை ஆணையத்தின் டி.எஸ்.பி.,யாக சுந்தரேசன் நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனால், மனித உரிமை ஆணையத்தின் மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அதிருப்தி அடைந்தது.

இதைத்தொடர்ந்து,  மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமார் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பை  எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென விலக்கி கொண்டது. இதுகுறித்து ஆணைய தலைவரின் கேள்விக்கு முறையான பதிலும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், னித உரிமை ஆணையத் தலைவர் வீட்டுக்கு  எந்த இடையூறுமின்றி தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,   தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசருமான மணிக்குமாரின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு கடந்த 3 நாட்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கும், மனித உரிமை ஆணையத்துக்கும் நடைபெற்று வரும் திரைமறைவு மோதலின் ஒரு கட்டமாக மனித உரிமை ஆணையத் தலைவருக்கு நெருக்கடி அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

அதிகாரத்திற்கு வரும் வரை மனித உரிமைகள் குறித்து பக்கம் பக்கமாக பேசும் ஆட்சியாளர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் மனித உரிமை ஆணையம் பொம்மை அமைப்பாகவே செயல்பட வேண்டும்.

அதன் தலைவராக வரும் நீதிபதிகள் விரலசைவுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு உடன்படாதவர்கள் இப்படியெல்லாம் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது ஜனநாயகம் அல்ல. எனவே, மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் மணிக்குமாருக்கு எந்த இடையூறுமின்றி தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.