விழுப்புரம்: நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும், கட்சியின் கொள்கைகள், கொள்கை பாடல் வெளியிடப்பட்ட நிலையில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் , வி.சாலை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி ஆறரை மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மாநாட்டில் மாலை 4மணி அளவில் மேடைக்கு வந்த விஜய், நடுவில் போடப்பட்டிருந்த மேடைமூலம் சென்று தொண்டர்களிடையே கையசைத்து, தொண்டர்களின் வரவேற்பை பெற்றார்.
பின்னர் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்து சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார் விஜய். இதனைத் தொடர்ந்து மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் தவெக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் விஜய். இதையடுத்து மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.
தவெகவின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டில் கட்சி தலைவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடக்கமாக தவெக பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழிகளை வாசித்தார். அதன்படி,
“நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்;
நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன்;
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகனாக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்;
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்;
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்”
இவ்வாறு உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு மொழிக் கொள்கையை பின்பற்றி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு, மின் கட்டணம், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மகளிர் பாதுகாப்பு, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம், மகளிர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.