சென்னை: விழுப்புரம் வி.சாலையில் இன்று நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்  மாநாட்டில் தவெகவின் கொள்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கொள்கைகளை  பேராசிரியர் சம்பத்குமார் வெளியிட்டார். அதில் இருமொழி கொள்கை, மாநில சுயாட்சி, சமத்துவம் உள்பட பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அத்துடன் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பாடலும் வெளியிடப்பட்டது.

தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று ( அக்.27ம் தேதி) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று மாலை 3மணி தொடங்கி ஆறரை மணி அளவில் முடிவடைந்தது. இந்த மாநாட்டில்,  பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.  சுமார் 8 லட்சம் பேர் வரை மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறத.

மாநாடு, பறையாட்டம், நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. சரியாக நான்கு மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் அக்கட்சி தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். பின்னர், தவெக மாநாட்டில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியானது.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் தவெகவின் தொண்டர்களே அறிவிப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் விஐய்  ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில்,   அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் தவெகவின் தொண்டரான பேராசிரியர் சம்பத்குமார் வெளியிட்டார்.

தவெக கோட்பாடு : 

பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும்.மக்கள் யாவரும் பிறப்பால் சமம்.பாரபட்சமற்ற சமநிலைச் சமூகம் படைப்பதே கோட்பாடு.

தவெக குறிக்கோள் : மதம், சாதி, நிலம், இனம், பாலின அடையாளம், பொருளாதாரம் என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது தவெக குறிக்கோளாகும்.

தவெக கொள்கைகள் :

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் (secular, social justice, ideology)

ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இடம், மொழி, சாதி, பாலினம் என பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது. ஆட்சியதிகாரம், சட்டம், நீதி அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகளை பறிக்கும் மாநில, மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது.

இட ஒதுக்கீடு அல்ல, விகிதாச்சார இடப்பங்கீடு

இட ஒதுக்கீடு அல்ல, விகிதாச்சார இடப்பங்கீடு உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்து பிரிவினர்களும், அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் முக்கியத்துவம் வழங்குவது தமிழக வெற்றி கழகத்தின் சமதர்ம சமூக நீதியாகும்.

சமத்துவம்

சாதி மதம் இனம் நிறம் மொழி பொருளாதாரம் வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்திற்குரிய உரிமை, எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லா வகையிலும் எல்லோரும் சமமானவர்கள் என்பது நம்முடைய சமத்துவம்.

மதச்சார்பின்மை

மதச்சார்பற்ற தனிப்பட்ட மத நம்பிக்கைகளிலும் அனைத்து மதத்தினரையும், மத நம்பிக்கை அற்றவர்களையும் சமமாக பாவிக்கும் ஆட்சி நிர்வாகம் தான் தமிழக வெற்றி கழகத்தின் மதச்சார்பின்மை கொள்கை.

மாநில தன்னாட்சி

மாநில தன்னாட்சியின் உரிமையை அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை.
இந்த உரிமைகளை மீட்பது தமிழக வெற்றி கழகத்தின் உரிமை ஆகும்.

இருமொழிக் கொள்கை

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றுகிறது தமிழக வெற்றி கழகம்.
தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி. தமிழ் வழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் . அரசியல் தலையீடற்ற அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் நிர்வாகம். அரசு மற்றும் தனியார் துறைகளில் எந்த துறையிலும் அரசியல் தலையீடற்ற லஞ்ச லாவண்யம் ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவோம். மதம், இன,மொழி, வர்க்க பேதமற்ற வகையில் கல்வி சுகாதாரம் தூய குடிநீர் எல்லோருக்குமான அடிப்படை உரிமை.

தீண்டாமை ஒழிப்பு

இயற்கை சுற்றுச்சூழலை காப்பது அரசின் கடமை. பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது, தீண்டாமை ஒழிப்பு, பழமை வாத பழக்கவழக்கங்களை நிராகரிப்பது தீண்டாமை ஒழிப்பின் முதல் படி ஆகும்.

போதையில்லா தமிழ்நாடு

உடல் நலன்களை கெடுக்கும் சமூக சீர்கேடுக்கு வழி வகுக்கும் போதை இல்லாத தமிழ்நாட்டை படைப்போம் என்பது தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கொள்கை.

இவ்வாறு விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின்  கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது.

பாடலின் வரிகளை கீழே காணலாம்..

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதோ…
அறத்தோடு வாழும் குலத்தோன் இதோ…
தமிழ்த்தாயின் பிள்ளை தலைச்சன் இதோ…
உழைக்கும் இனத்தின் விளைச்சல் இதோ…

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

வெற்றி வெற்றி வெற்றி வாகை…
வெற்றி வெற்றி வெற்றி…

தமிழ் வணக்கம் அனைவருக்கும்
புது சரித்திரம் இனி பிறக்கும்..
போர் துவக்கம் யார் தடுத்தும்
இது நட நடவென நடக்கும்…

பறை முழங்கிட தரை நடுங்கிட
தலைமுறை தனை நிமிர்த்தும்…
இனம் விடுதலையினை சுவைக்கும்
ஒளி நிரந்தரமென நிலைக்கும்…
நில்லாமல் போராடு வெல்லும் வரை
இல்லாமை இல்லாமல் செல்லும் வரை…

துப்பார்க்கு துப்பாய தூஉம் மழை…
நினைத்தால் முடிப்போம் மாறும் நிலை
ஐயா வாகை வாகை வாகை
வெற்றித் தமிழ் வாகை…

யானை யானை யானை…
இது ரெட்டைப் போர் யானை

ஐயா வாகை வாகை வாகை…
வெற்றித் தமிழ் வாகை

யானை யானை யானை…
இது ரெட்டைப் போர் யானை

கொள்கைத் தலைவர்கள் யார்?
கொள்கை வேர்தன்னைப் பார்…

கொள்கைத் தலைவர்கள் யார்?
கொள்கை வேர்தன்னைப் பார்…

மொழி எழுந்திட தரை விழுந்திட்ட
குருதியில் மன உறுதியும் பெற
மதம், இனம், மொழி, பாலினமது சமமெனப் புது யுகம் பிறந்திட
நீர், மருத்துவம், காற்று, உணவோடு, கல்வி உலகத் தரமடைந்திட
அறிவியலோடு அழகிய தமிழ்நாடெனப் புகழ் வானுயர்ந்திட
நமது உரிமை நமது பெருமை
கரங்கள் இணைய மாறும் நிலைமை
மண் பயனுற பெண் பயனுற
இத்தலைமுறை புத்தொளிப்பெற
வெற்றித் தலைவன் வழியில்
நித்தம் செல்வோம்…

கொள்கைத் தலைவன் வழியில் யுத்தம் வெல்வோம்…
மொழித்தியாக முன்னோரைக் கொண்டாடவே
மதச்சார்பு இல்லா ஜனம் சேரவே
விழிப்போம் உழைப்போம் நமக்காகவே…
இலக்கே நமக்கே… ஜெயம் நாளையே…

தமிழக வெற்றிக் கழகம்
எதிர்காலம் அமைக்கும் கழகம்

தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்…
நல்வாக்கும் உனதே நல்லாட்சி நமதே…

முன்னேற்றம் வருதே… கொண்டாட்டம் தருதே…
நல்வாக்கும் உனதே… நல்லாட்சி நமதே…
முன்னேற்றம் வருதே… கொண்டாட்டம் தருதே…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…
யாதும் ஊரே… யாவரும் கேளிர்…
தமிழக வெற்றிக் கழகம் வாழீர்…
புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் நாம் செய்வோம்…