விழுப்புரம்: நடிகர் விஜயின் தவெக முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற இருப்பதால், இன்று அதிகாலை முதல் விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டு திடலில் சாரை சாரையாக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
தடுப்புகளை தாண்டி, தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர். மாநாட்டு திடலில், இப்போதே சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இன்று காலை விக்கிரவாண்டியில் த.வெ.க., மாநாட்டு திடல் அருகிலுள்ள பிள்ளையார் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.இதைத்தொடர்ந்து மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மாநாட்டுப் பந்தலில் 700க்கும் அதிகமான சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 3000 போலீசாருடன் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று (அக்.,27) மதியத்திற்கு மேல் தான் தொடங்கும் மாநாட்டில் கலந்துகொள்ள அதிகாலை முதலே தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர், உணவு தயார்பர்ளர்கள், டெக்னிசியன்கள் பலர் நேற்று இரவே மாநாட்டுக்கு வந்து முன்னேற்பாடுகளை செய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் மாநாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். மாநாட்டு தற்போதே திடலில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
நேற்று இரவு முதலே மாநாட்டுக்கு வெளியே குவிந்து இருந்த தொண்டர்கள் இன்று காலை மாநாட்டு கேட் திறந்ததும், முண்டியடித்து சென்று இருக்கையை கைப்பற்றி வருகின்றனர்.
கூட்டம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு காவல்கள், பவுன்சர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இருந்தாலும் மாநாட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.