சென்னை: நாளை வாழப்பாடியார் 22வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி,   காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

ராசேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தி இவர்,. 1959ல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். பின்னர்,  அடுத்த ஆண்டே திராவிட கழகம் கட்சியில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில்  இணைந்தார். அவரது சுறுசுறுப்பு மற்றும் உழைப்பின் காரணமாக,  அவருக்கு 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், அவர்  காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார்.  பின்னர் தமிழ்நாடு காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, கட்சியை வளர்த்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

வாழப்பாடியார்,  காங்கிரஸ் கட்சி சார்பில்,  முதல் முறையாக 1977 நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1980, 1984, 1989, 1991 நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். பின்னர்,  1998 நாடாளுமன்ற தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று பிரதமர் வாஜ்பாயின் மத்திய அமைச்சரவையில் இந்திய பெட்ரோலியதுறை மந்திரியாக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, 1991-1996 பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி பிரச்சினை ஏற்பட்டது. அந்த நேரத்தில் பிரதமர் நரசிம்மராவ் உள்பட மத்தியஅரசு, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தனது மத்திய அமைச்சர் பதவியை துச்சமென் தூக்கி எறிந்தார்.

இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது 22வது நினைவு தினம் நாளை  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராஜீவ் பவன் வளாகத்தில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

இதையொட்டி, வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் மாநில துணைத்தலைவர் இராம சுகந்தன், அகில இந்திய கிராம தொழிலாளர் சம்மேளன நிர்வாகி இராம கர்ணன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி ராமசுகந்தன் மற்றும் இரா கர்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டர்களின் அன்புத்தலைவரும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்து காட்டிய உத்தமத் தலைவரான  வாழப்பாடியாரின் 22வது நினைவு தினம் நாளை (27-10-2024)  சிறப்பிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராஜீவ் வன் வளாகத்தில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையணிவித்து நினைவுநாள் விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

இதையொட்டி,  சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள்,  தோழர்கள் ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ராஜீவ் பவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து அவரது நினைவைப் போற்ற அன்புடன் அழைக்கிறோம்.

அதுபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள வாழப்படியார் நினைவிடத்தில் சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் வருகை தந்து வாழப்பாடியாரின் அவரது நினைவைப் போற்ற அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.