மதுரை:  தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுப்பு மற்றும் படித்துறைகளை பராமரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

‘பிரபல வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்  தாமிரபணி ஆற்றை பாதுகாக்க  உத்தரவிடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  ‘திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவேகடந்த விசாரணைகளின்போது,   பொதுப்பணித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , “தாமிரபரணி ஆற்றின் ஓரங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் பெரும்பாலும் கழிவுகள் கலக்கின்றன. ஆறுகளின் மாசு தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே நடவடிக்கை எடுக்கும். பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க இயலாது” என தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், “தாமிரபரணி ஆற்றுக்கு உரிமை கோரும் நெல்லை மாநகராட்சி, அதற்கான கடமைகளையும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.

இதைத்தொடர்ந்து,   “இந்த வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயற் பொறியாளர்கள், சுற்றுச்சூழல் துறையின் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர்களை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டனர்,.

மேலும்,  உள்ளாட்சி பகுதிகளில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை   ஒத்திவைத்தனர்.

இதைத்தொடர்ந்து,  அக்டோபர் 3ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  , மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகி உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். இல்லை என தெரிவிக்கப்பட்டதால், அவர் உடனடியாக காணொளி காட்சி வழியாக மூலம் ஆஜராக உத்தரவிடப்பட்டது. சிறிது நேரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எனக் கேட்டனர்.

அதற்கு அதிகாரிகள், “கழிவுநீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், கழிவுநீர் விவகாரத்தில் 2021-ம் ஆண்டில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்து உள்ளோம். என்று கூறினர்.

அப்போது நீதிபதிகள், “தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிது காலம் அவகாசம் தருகிறோம். அதற்குள் உரிய நடவடிக்கை எடுத்து, அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அடுத்த விசாரணையின்போது நெல்லை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.