சென்னை: 20ஆண்டு இல்லை  ‘சோழர் காலத்தில் இருந்தே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவை அகற்றப்பட வேண்டும்’ என, திருவேற்காடு கொலடி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில், கொலடி ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக, ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த  வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,  அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.  மேலும், குறிப்பிட்ட அந்த பகுதியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், ’20 ஆண்டுகள் இல்லை; சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவை அகற்றப்பட வேண்டும்’ என்றனர். மேலும் கொலவாய் ஏரி மொத்தம், 162 ஏக்கரில் இருந்த நிலையில், தற்போது ஆக்கிரமிப்பாளர்களால்,  112 ஏக்கரில்  ஏரி சுருங்கி விட்டதாகவும் கூறினர்.

இதைத்தொடர்ந்து குடியிருப்போர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட இடத்திற்கு பட்டா உள்ளதாகவும்,  பட்டா நிலத்தில்தான் பலர்  குடியிருப்புகள் கட்டியிருப்பதாகவும், அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும்,  கோரினார்.

இதைத்தொடர்ந்து கருத்து,  நீதிபதிகள், மழை காலத்தில் அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுவர் என்பதை கருதியே, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதாகவும், இவ்வழக்கில் அவர்களையும் இணைப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமித்த முதல் அமர்வு, விசாரணையை நவம்பர் 21க்கு தள்ளிவைத்தது.  மேலும், தமிழக அரசின் நிலை அறிக்கை போதுமானதாக இல்லை எனக் கருதி, குடியிருப்போர் வழக்கறிஞர் வக்கீல் மற்றும் ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், கொலடி ஏரியில் புதிதாக மேலும்  ஆக்கிரமிப்பு  செய்து கட்டப்பட்டு வரும் கட்டிங்களை  பூந்தமல்லி வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் இடித்து தள்ளினர்,  மொத்தம் 27 வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.  இதற்கிடையில் வழக்கும் விசாரணைக்கு வந்துள்ளதால்,  கொலடி ஏரியில்  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஒரு குழுவிற்கு 5 பேர் வீதம் 10 குழுக்களாக பிரிந்து 50 பேர் உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அளவீடு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ‘கொலடி ஏரியில் சுமார்  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பதாக  கூறப்படுகிறது.