புவனேஸ்வர்: டானா புயல் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு கனமழையுடன் ஒடிசா மாநிலம் தாம்ரா அருகே கரையைக் கடந்ததது. இதனால், கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது.
டானா சூறாவளி பலத்த மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டு வந்ததால், பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா கடற்கரை கிராமத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் சாலைகளை சுத்தம் செய்வதை பார்த்தனர். நிலச்சரிவைத் தொடர்ந்து ஒரு சில வீடுகளும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, டானா புயல் காரணமாக விமான சேவை உள்பட பல்வேறு சேவைகள் நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், புயல் கரையை கடந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒடிசா அரசு தெரிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து விமான சேவையும் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் அக்டோபர் 24ந்தேதி அதிகாலையில் தீவிரப் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது. இந்த புயல் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் பகுதிக்கு வடகிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், தாமரா பகுதிக்கு தென்கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. பின்னர் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரை அருகே உள்ள பிதர்கனிகா மற்றும் தாமரா இடையே அதிகாலையில் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது.
புயல் கரையை கடந்த சமயத்தில், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது ‘டானா’ புயல் கரையைக் கடந்த நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்தது.
இந்த புயல் காரணமாக, ஒடிசாவின் பல பகுதிகளில் சுமார் ஆறு மணி நேரம், ப லத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. லசோர், பத்ரக், பிதர்கானியா, புரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் முன்னெச்சரிக்கையாக ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன.
முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, புவனேஷ்வரில் உள்ள மாநில அவசர காலக் கட்டுப்பாட்டு அறையில் தங்கியிருந்தபடி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். அதுபோல, டானா புயல் காரணமாக, , மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புர்பா மிதினாபூரில் உள்ள திகா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஹவுராவில் உள்ள மாநில அவசர காலக் கட்டுப்பாட்டு அறையில் தங்கியிருந்து புயலின் நகர்வுகளைக் கவனித்து அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.