சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்ந்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சாகு ஏற்கனவே அறிவித்து உள்ளார். அதன்படி, நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். அப்போது அக்.29ம் தேதி தொடங்க உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சி, பி.ஏ. சங்மாவின் தேசிய மக்கள் கட்சி ஆகியவை மற்றும் மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.