யநாடு

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி மக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார். ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது.

வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்ததையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.

பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றிரவு வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரியங்கா காந்தி தனது தாய் சோனியா காந்தியுடன் வயநாட்டுக்கு வந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பிரியங்கா காந்தி,

“35 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறேன். 17 வயதில் எனது தந்தைக்காக வாக்கு சேகரித்தேன். பலமுறை கட்சி நிர்வாகிகளுக்காக பரப்புரை செய்துள்ளேன். முதல்முறையாக இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன்.

மக்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

உண்மையும், அகிம்சையும் எனது சகோதரர் ராகுல் காந்தியை அன்பிற்காகவும், ஒற்றுமைக்காகவும் இந்தியா முழுவதும் 8,000 கிமீ நடைபயணம் மேற்கொள்ள தூண்டியது.

உங்கள் ஆதரவு இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. நீங்கள் அவருடன் இருந்தீர்கள். தொடர்ந்து போராடுவதற்கு உங்கள் பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தீர்கள்”

என்று கேட்டுக் கொண்டுள்ளார்.