ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் உடலை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பின் கடந்த ஓராண்டாக மறைந்திருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள 101 பேரை விடுவிப்பதற்காக புதிய திட்டத்தை இஸ்ரேல் தயாரித்துள்ளது.

அதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் உடலை பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்க முடியாது.

இவ்விசயத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள 101 பணயக்கைதிகளை விடுவித்தால் தான் யாஹ்யா சின்வாரின் சடலம் அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என்றும், பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவில் ஹமாசுக்கு எதிராக தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.