சென்னை: எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை கொள்கை கூட்டணி. ‘தி.மு.க., தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்வதால் இ.பி.எஸ்., பொறாமையில் பேசுகிறார். அவர் ஜோதிடர் ஆகிவிட்டார்’ என கட்சி நிர்வாகி திருமண விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டான் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தினார். தொடர்ந்து அங்கு சிறப்புரை ஆற்றினார்,.
சென்னை அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி வேணுவின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர், 6வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக, ஏராளமான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க., என்றும் மக்கள் பணியில் இருக்கும். எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை. கொள்கைக்காக அமைக்கப்பட்டது. தி.மு.க., கொள்கை கூட்டணி . திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல; மக்கள் கூட்டணியாகவும் உள்ளது
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்கள். அதுபோல் இ.பி.எஸ்., காத்துக் கொண்டிருக்கிறார். தனது கட்சியை வளர்க்க முடியாதவர் அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். தி.மு.க., கூட்டணி உடையப்போகிறது என்கிறார் இ.பி.எஸ்; அவர் கற்பனையில் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது ஜோதிடர் ஆக மாறினார் என தெரியவில்லை. அவர் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்.
மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை தொடர்ந்து தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர் தான் இ.பி.எஸ்.,. அவர் ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க வர மாட்டார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மட்டுமல்லாமல், அதற்கு பிறகு வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தி.மு.க., கூட்டணி தான் வெல்லும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் வரை அந்த கூட்டணி நீடிக்குமா என்று பார்ப்போம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் திருமண விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.