சென்னை:  தமிழ்நாட்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ்,  ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு உள்பட மகப்பேறு பலன்களைப் பெற உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணியில் பணியாற்றி வரும் பெண் அரசு ஊழியர்கள் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறக்கும் போது 26 வாரங்களுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம். அவர்கள் பிரசவ தேதிக்கு 8 வாரங்களுக்கு முன்பு விடுப்பு எடுக்கலாம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு 26 வாரங்கள் வரை நீட்டிக்கலாம். ஆனால், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமையை  போராடி கடந்த அதிமுக ஆட்சியின் போது பெற்றது. ஆனால், திமுக ஆட்சி வந்ததும்,  ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு உரிமையை ரத்து செய்தது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில், தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (NHM) ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பின்போது ஊதியம் வழங்க முடியாது என்று சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக செவிலியர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

மிழ்நாடு அரசு, மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஒப்பந்தம் அடிப்படையில்  செவிலியர்களை அரசு மருத்துவமனையில் நியமித்து வருகிறது. அதன்படி,  தமிழகத்தில் 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள்  இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு அரசின் பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக,  மகப்பேறு விடுப்பு வழங்க அரசு மறுப்பதுடன், அதற்கான ஊதியமும் வழங்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில்,  செவிலியர்களுக்கு 270 நாட்களுக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு மறுத்ததை எதிர்த்து, எம்ஆர்பி செவிலியர் அதிகாரமளித் தல் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் செவிலியர்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க முடியாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டத்தில் கூறப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில், ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகைகளை மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒப்பந்தப் பணி நியமன நிபந்தனைகளைக் கூறி, மகப்பேறு சலுகைகளை மறுப்பதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மகப்பேறு சலுகை கோரி அளித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை மூன்று மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]