வேலூர்: ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, உள்பட சிலரை காவல்துறை தலைவர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்தது தொடர்பாக, டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை , சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டில் சட்ட விரோதமாக வேலைக்கு அமர்த்தியதுடன், ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை வீட்டில் இருந்து திருடியதாக அடித்து கொடுமைப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, ஆயுள் தண்டனை கைதியின் தாயார் புகாரை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை தொடர்ந்து, சிபிசிஐடி அதிகாரிகள், செப்டம்பர் 7ஆம் தேதி வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன், சிறை தனி பாதுகாப்பு அதிகாரி அருள்குமரன், டிஐஜி ராஜலட்சுமியின் பாதுகாவலர் ராஜு, சிறை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி சிறை வார்டன்களான சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டு, மேலும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் 10, 11 தேதிகளில் அவர் தலைமையில் சேலம் மற்றம் வேலூர் சிறைகளுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ராஜலட்சுமி சட்டவிரோதமாக கைதிகளை கொடுமை படுத்தி வருவது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹமான் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாவலர் ராஜூ, சிறைக் காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோரிம் புகார் தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்ட சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரஹமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.