பெங்களுரு

கனமழை காரணமாக இன்று பெங்களூருவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையிதன் தாக்கம் கர்நாடகத்திலும் எதிரொலித்து வருகிறது. சென்ற வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி  ஆந்திராவில் கரையை கடந்ததால் பெங்களூருவில் 3 நாட்கள் கனமழை பெய்து பிறகு 2 நாட்கள் வெயிலின் தாக்கம் இருந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியதால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவும் பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக பெங்களூருவில் பல சுரங்க பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது.

நேற்றும் கனமழை பெய்ததால் சுரங்கப் பாதைகள், சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி நகரில் பல்வேறு பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பெங்களூரு உள்பட 18 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷ் அறிவித்துள்ளார்