சென்னை: தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  அவர்கள் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது இல்லை என கூறய  அமைச்சர் சிவசங்கர், “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் , அதனால் அரசு பேருந்துகளுடன்  தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்க உள்ளோம் என தெரிவித்தார்.

14,086 பேருந்துகள் இயக்கம்: “தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் 3 நாட்களுக்கு முன்பாகவே சொந்த ஊர்களுக்கு பயணிக்க வசதியாக 14,086 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கும் 6,276 பேருந்துகளுடன் கூடுதலாக, 4,900 சிறப்பு பேருந்துகள் என 11,176 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்த பிறகு, பிற ஊர்களில் இருந்து நவ.2 முதல்4 வரை சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 6,276 பேருந்துகளுடன் கூடுதலாக 3,165 பேருந்துகள் மற்றும் பிற முக்கிய ஊர்களில் இருந்து மற்ற ஊர்களுக்கு 3,165 என 12,606 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,   மாநிலத்தின் வேறு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குவதால் ஒரு கி.மீ.க்கு ரூ.90 என இயக்க கட்டணம் அதிகரிக்கும். ஆனால், தனியார் பேருந்துகளுக்கு ரூ.51.25 மட்டுமே தரப்படும். வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க கட்டணம் ரூ.51.25 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது.  இதை தனியார்மயம்  என தொழிற்சங்கத்தின் குற்றம் சாட்டுகின்றனர்,  அப்படியானால் 7,200 புதிய பேருந்துகள், புதிய நடத்துநர்கள், ஓட்டு நர்களை அரசு ஏன் நியமிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அமைச்சர், அவர்கள் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது இல்லை. அரசியலுக்காக இவ்வாறு குற்றம்சாட்டுகின்றனர்” என்று கூறினார்.

பொதுமக்கள் அரசு பேருந்துகளில் என்ன கட்டணம் தருவார்களோ, அதே கட்டணத்தை தரலாம். ‘அரசு ஏற்பாடு செய்தது’ என அந்த பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரைசாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.