சென்னை: முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டு வரும் என தெரிவித்தார்.
தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஆகியோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன் அங்கு பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவையையும் ஆஈய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, தாம்பரம் முடிச்சூர் வெளிவட்ட சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கரில் 170 பேருந்துகள் நின்று செல்லும் விதமாக புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும், இதனுடன் சேர்ந்து முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முடிச்சூரில் 150 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றும் சேகர்பாபு குறிப்பிட்டார்.