பெரியகுளம்
கடும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எனவே கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக சுருளி அருவி பகுதி, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு கனழை பெய்தததன் எதிரொலியாக, நேற்று காலை சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுருளி ஆற்று பகுதிக்கு பொதுமக்கள் சென்று விடாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.