ராஞ்சி :சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட உள்ளது.
81 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக கூட்டணியும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணியும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
இந்த தேர்தலில், பாஜக கட்சி ஏஜேஎஸ்யு, எல்ஜேபி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. அதன்படி, பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது. எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் எனவும் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, தற்போது ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தலுக்கான பா.ஜ.க சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 66 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில், பாஜக மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி ராஜ்தன்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜ்மஹாலில் இருந்து அனந்த் ஓஜா, போரியோவில் இருந்து லோபின் ஹெம்ப்ராம், லிட்டிபாராவில் இருந்து பாபுதன் முர்மு, மகேஷ்பூரில் இருந்து நவ்நீத் ஹெம்ப்ராம், ஷிகாரிபாடாவில் இருந்து பரிதோஷ் சோரன் மற்றும் நாலாவில் இருந்து மாதவ் சந்திர மஹதோ ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சமீபத்தில் பாஜகவில் இணைந்த, சிபு சோரன் மருமகள் சீதா சோரன், முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சரைக்கேலாவில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ” கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் அக்டோபர் 15ம் தேதி ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கலந்துரையாடி 66 பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்டமாக 66 பெயர்களுக்கு மத்திய தேர்தல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது” என கூறியுள்ளார்.