சென்னை; “குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள்”  என  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அப்போது, கடந்த 3 ஆண்டுகளில்   அறநிலையத்துறை மூலம் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார்.

கடந்த 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களில் குடமுழுக்கு

ரூ.6,792 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

10,638 கோயில்களில் திருப்பணிகள்

ரூ.1,103 கோடி நன்கொடை கிடைத்துள்ளது

ரூ.257 கோடி மதிப்புள்ள 442 கிலோ சுத்த தங்கம் வங்கிகளில் முதலீடு

சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இன்று திருமணம் நடந்த 31 ஜோடிகளுக்கும் தலா ரூ.60,000 மதிப்பிலான பொருட்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அறநிலையத்துறை சார்பில் மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடை தங்கத் தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  “முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தான் அதிகமாக கலந்து கொள்கிறேன். அமைச்சர் சேகர்பாபு சீரிய முயற்சியோடு, 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தக்கூடிய வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்து அறநிலையத்துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் கலந்து கொள்வது உண்டு. கடந்த 3 ஆண்டுகளில் இந்த துறையில் சார்பில் அமைச்சர் சேகர்பாபு முயற்சியோடு பல்வேறு சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தோம். அவர்கள் தரும் ஆலோசனையின்படி, அந்த பணியை தொடர்ந்து நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.6,792 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 10,638 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,103 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.6792 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுள்ளோம். 17000 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டது.

9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 720 கோயில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.257 கோடி மதிப்புள்ள 442 கிலோ சுத்த தங்கம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் கிடைக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை திமுக அரசுதான் செயல்படுத்தியது. சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசிக்கும் உரிமையை நிலைநாட்டும் தீர்ப்பை பெற்றதால் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

1000 ஆண்டு பழமைான கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1000 ஆண்டு பழமையான 2724 கோயில்களில் ரூ.426.62 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊர்க் கோயில்கள் தொடர்பான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். கோயில்கள் தொடர்பான திமுக அரசின் நடவடிக்கைகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அரசை விமர்சிக்கின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துவர்களால் திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அறநிலையத்துறை செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது.

முன்பெல்லாம், ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவார்கள். ஆனால் இன்று ‘அளவோடு பெற்று வளமோடு வாழ்க’ என்றே வாழ்த்துகிறார்கள். இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வந்துள்ளதால், நாமும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லும் நிலைமையும் வந்துள்ளது. உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் ”

இவ்வாறு  பேசினார்.