ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில், ஓமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற 4 நாளில் பயங்கரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்து உள்ளனர்.
ஜாம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனத்தின் பணியாளா்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அருகே தற்காலிக குடில் அமைத்து தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினா். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் நான்கு பேர் மற்றும் ஒரு மருத்துவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளி மாநில தொழிலாளர்கள் அடங்கிய குழுவை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்த அப்பகுதி முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தும், துணை ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்த தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணியின் புதிய ஆட்சி பொறுப்பேற்ற 4 நாள்களில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முதல்வா் ஒமா் அப்துல்லா, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கந்தா்பாலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல். இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது. இதற்கு நமது பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளதுடன், தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.