சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான நிலையில், யார் திராவிடர்? அதுகுறித்து பேச நான் தயார், நீயா? நானா?, வா பேசலாம், நீ பேச தயாரா? என அன்பில் மகேசை விவாதத்துக்கு அழைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
” தமிழர் இல்லாத ஒருவரை ஆள்வதற்கு , வசதியாக திராவிடத்தை வைத்துக்கொண்டு , திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ‘ எனவும் , இதுகுறித்து அன்பில் மகேஷ் என்னோடு பேச தயாராக இருக்கிறாரா, ஒரு இடத்தில் அமர்ந்து பேசுவோமா என சீமான் சவால் விடுத்துள்ளார்.
சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது. இது , தமிழ்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து, ஆளுநரை விமர்சிப்பதா என பாஜக எம்.பி எல்.முருகன் உள்ளிட்ட பலரும் திமுகவினருக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த போது, வராத கோபம் 2 வரியை தூக்கியதற்கு கோபம் வருகிறதா என காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
“நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது வராத கோபம் 2 வரியைத் தூக்கியதற்கு கொந்தளிப்பதா?. கீழடியில் கண்டெடுக்கப்பட்டது தமிழர் நாகரிகம்தான், திராவிட நாகரிகமோ அல்லது இந்திய நாகரிகமோ அல்ல. தமிழில் எழுத, படிக்கத் தெரியாத மூன்று தலைமுறைகளை உருவாக்கியதுதான் திராவிடத்தின் சாதனை” என்று தெரிவித்தார்.
அவரது விமர்சனம் திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், இலங்கை தமிழர் கொல்லப்பட்டபோது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியும், தமிழ்நாட்டில் மறைந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியும் நடைபெற்றது. ஆனால், தமிழர்கள் வேட்டையாடப்பட்ட விவகாரத்தில் அப்போதைய திமுக அரசு மவுனம் சாதித்தது. இதை குறிப்பிட்டே சீமான் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது
இதற்கு பதில் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சீமான் பேசியது வேதனைக்குரியதாக இருக்கிறது, தமிழில் தான் பேசுகிறார், அதே தமிழில் தான் எங்களை திட்டுகிறார். ஒரு தமிழனாய் இருந்துகொண்டு , இவ்வாறு பேசுவது தமிழ் மீது அவமரியாதையை காட்டுவது போன்றது‘தான், அவர் எதை வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்று தெரிய வில்லை.
நம்முடைய அரசியல் என்று வரும்போது, குறிப்பாக தமிழ்நாடு அரசு என்று வரும்போது அரசியலே கல்வியில் தான் ஆரம்பிக்கிறது. அனைவருக்கும் கல்வி என்று நீதிக்கட்சி ஆரம்பித்தது தான் எல்லாமே. அப்படி வரும்போது, தாய்மொழியை தூக்கிவிடுவோம், எடுத்து விடுவோம் என்று சொல்வது உள்ளபடியே வேதனைக்கு உரியதாக தான் இருக்கிறது என விமர்சித்தார்.
இதற்கு பதில் கூறிய சீமான், எந்த இடத்தில் திராவிட நாடு உள்ளது, இலக்கியத்தில் இருக்கிறதா? ; தமிழர் இல்லாத ஒருவரை ஆள்வதற்கு , வசதியாக திராவிடத்தை வைத்துக்கொண்டு , திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ‘ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் விவாதம் செய்ய தயாரா? இடத்தை அவர் தேர்வு செய்ய தயாரா? யார் திராவிடர்? என சரமாரியாக கேள்வி எழுப்பியவர், நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்படும்.
தமிழக அமைச்சரவையில் யார் தமிழர்கள் உள்ளனர்? விரல் விட்டு எண்ண முடியுமா? திருமாவளவன் முதலமைச்சராக வருவதை வரவேற்கிறேன். அவருக்கு தகுதியிருக்கு ஒரு தமிழரா அவர் முதலமைச்சராகுவதை நான் தம்பியாக பெருமைப்படுகிறேன்.
திருமாவளவன் முதலமைச்சராகும் கனவு பலிக்காது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு, அவர் முதலமைச்சராக வரக்கூடாது எனக் கூறுவதற்கு எல்.முருகன் யார்?.எல்.முருகன் மட்டும் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகலாமா?
தமிழர் நிலத்தில் திருமாவளவன் முதலமைச்சராக கூடாதா? உள் இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு போட்டால் முதலமைச்சராக விடமாட்டீங்களா? உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றோம், இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றோம்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக அச்சத்தில் உள்ளது. நேர்மையாளனா, நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் எதைக் கண்டும் பயப்பட தேவையில்லை.
ஈஷா யோகா மையம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அதனை தடுக்க முடியாது. இங்குள்ள இரு கட்சியினருக்கு தெரியாமல் எல்லாம் நடக்கிறதா ? பிரதமருடன் ஜக்கிவாசுதேவ் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளார். பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் அங்கு வருகின்றனர். யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது என சொன்ன அரசு இப்போது இல்லை என கூறுகிறது” என்றார்.