டெல்லி: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்புக்கு சொந்தமான ரூ.61 கோடி சொத்துகள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக  26 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத் துறை தரிவித்து உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட ‘பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ)’ அமைப்பின் மொத்தம் ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 26 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றும், சட்டவிரோதமான வழிகளில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் PFI திரட்டிய நிதி நாடு முழுவதும் உள்ள 29 வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், அவை தடை செய்யப்பட்டு உள்ளதாகவும்  அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நடவடிகைக்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா  (பிஎஃப்ஐ) அமைப்புக்கு கடந்த 2022ம் ஆண்டு  மத்தியஅரசு 5 ஆண்டுகாலம் தடை விதித்தது. மேலும், அதன் துணை அமைப்புகளான, ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அனைந்திய இமாம் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனிசேஷன்ஸ், நேஷனல் வுமன்’ஸ் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், ரஹப் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்டுப்பாட்டில்  பல்வேறு அறக்கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களுக்குச் சொந்தமான இருந்த ரூ.35 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அண்மையில் அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. தொடர்ந்து மேலும் பல சொத்துக்களை கையகப்படுத்தி உள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கேரளத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டது. அமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது குறிப்பிட்டதிலிருந்து அதன் உண்மையான நோக்கங்கள் இப்போது முற்றிலுமாக வேறுபட்டுள்ளன. சமூக இயக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்தியாவில் ஜிஹாத் மூலம் இஸ்லாமியத்தை நிறுவுவதுதான் அதன் உண்மையான நோக்கம்.

சமூகத்தில் அமைதியின்மை மூலம் உள்நாட்டு மோதலை உண்டாக்க வழிவகுக்கும் போராட்டங்களை திட்டமிட்ட அவா்கள், நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீா்குலைக்கும் வகையில் இணையான அரசு அமைப்புகளுடன் செயல்பட்டு வந்துள்ளனா்.

உடல்கல்வி வகுப்புகள் எனும் பெயரில் உறுப்பினா்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு  டெல்லி கலவரத்தின் போது வன்முறையைத் தூண்டியதில் அவா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அந்த அமைப்பில் குவைத், கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வளைகுடா நாடுகள் மற்று சிங்கப்பூரில் 13,000-க்கும் மேற்பட்ட தீவிர உறுப்பினா்கள் இருந்தனா். இந்தியாவில் முக்கியமான இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாத கும்பலை உருவாக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவிக்கு வெளிநாட்டு உறுப்பினா்கள் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது.   அமலாக்கத் துறை விசாரணையில் இதுவரை அமைப்புக்குச் சொந்தமான மொத்தம் ரூ.61.72 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமைப்பின் 26 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டு, 9 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.